அப்துல் கலாம் கனவுத் திட்டம் என்ற பெயரில் ரூ.1.30 கோடி பண மோசடி; 3 அதிமுக நிர்வாகிகள் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி

விருதுநகர்: அப்துல்கலாம் கனவுத் திட்டம் என்ற பெயரில் ரூ.1.30 கோடி மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம், சேத்தூர் 8வது வார்டு அதிமுக செயலாளர் பட்டுராஜன் (52), தேவதானத்தை சேர்ந்த அதிமுக கிழக்கு மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கந்தலீலா (54), கீழராஜகுலராமனை சேர்ந்த அதிமுக மகளிரணி பொறுப்பாளர் ராணி நாச்சியார் (47) ஆகிய மூவரும் அறக்கட்டளை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் ‘அப்துல் கலாம் டிரீம் புராஜெக்ட் அண்ட் இரிடியம், காப்பர் சேல்ஸ்’ என்ற திட்டத்தில் ரூ.1 லட்சம் கட்டினால் 3 மாதங்களில் ரூ.5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நடுத்தர மக்களை குறிவைத்து பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தை சேர்ந்த பழனிசெல்வம் என்பவர் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார். புகாரில், ரூ.1 லட்சம் கட்டினால் 3 மாதங்களில் ரூ.5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி உறவினர்கள், நண்பர்களிடம் ரூ.1.30 கோடியை பெற்று பட்டுராஜன், கந்தலீலா, ராணி நாச்சியார் ஆகியோரிடம் கொடுத்ததாகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் இரவு பட்டுராஜன், கந்தலீலா, ராணி நாச்சியார் ஆகிய 3 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மோசடி சம்பவத்தில் உடந்தையாக இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரும் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: