குளிர்பானத்தில் எலிமருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவனை கொலை செய்த மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை: காரைக்கால் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காரைக்கால்: குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவனை கொன்ற மாணவியின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பாலமணிகண்டன் (13) 8ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், கடந்த 2022 செப்டம்பர் 2ம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை தாய் மாலதி, உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விஷம் அருந்தியிருப்பதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக மாலதி, மகனிடம் கேட்டபோது, உடன் படிக்கும் மாணவியின் தாய் பள்ளியில் குளிர்பானம் கொடுத்ததாக கூறியுள்ளார். பள்ளியில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது பாலமணிகண்டனுடன் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தாய், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். அதில், மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால், இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாய் குளிர்பானத்தில் எலிமருந்து கலந்து அதை பள்ளி காவலாளி மூலம் மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் 2 நாட்கள் கழித்து பாலமணிகண்டன் உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனையடுத்து மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு புதுச்சேரி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை காரைக்கால் நீதிமன்ற நீதிபதி மோகன் விசாரித்து, சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

Related Stories: