திருவண்ணாமலை, அக். 24: திருவண்ணாமலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கடந்த ஆண்டு மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், அணைகள் நிரம்பி உள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆனால், நேற்று படிப்படியாக 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்நிலையில், திருவண்ணாமலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று கள ஆய்வு நடத்தினர்.
அப்போது திருவண்ணாமலை நகரில் மழையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்தாண்டு பெஞ்சல் புயல் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மண்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதிக்கு மேலே சென்று பார்வையிட்ட கலெக்டர், மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தபகுதியில் அதிகாரிகள் கவனமாக கண்காணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஆபத்தான பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் தற்போது பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலர் சுதாகர், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் உள்பட பல்வேறு துறை அலுவலர் உடன் இருந்தனர்.
