கலசபாக்கம், அக்.24: அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை அடித்ததாக கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அணியாலை காம்பட்டு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 132 மாணவர்கள் படித்து வருகின்றனர். 2 பெண் ஆசிரியைகள் மற்றும் 1 ஆசிரியர் உள்ளனர். இப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவர்களை கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியை வழக்கம்போல் வந்தார். நேற்று பொறுப்பு தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். அப்போது மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் அவ்வழியாக காரில் சென்றபோது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் மாணவர்கள் சமரசம் அடைந்தனர்.
