திருவண்ணாமலை, அக். 23: திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதையொட்டி, மழை பாதிப்புகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலான மழை பெய்தது. விடிய, விடிய பெய்த கனமழையால், நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல், ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளன. பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடியில் தற்போது 113.10 அடி நிரம்பியுள்ளது. கொள்ளளவு 6064 மி.கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1680 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 1680 கன அடி நீர் தென்பெண்ணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும் செங்கம் தாலுகா குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 59.04 அடியில் தற்போது 50.84 அடி நிரம்பியுள்ளது. அணையின் இருந்து வினாடிக்கு 455 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல் கலசபாக்கம் தாலுகா மிருகண்டா அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 22.97 அடியில் தற்போது 14.97 அடி நிரம்பியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. போளூர் தாலுகா செண்பகத்ேதாப்பு அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 62.32 அடியில், தற்போது 55.43 அடி நிரம்பியுள்ளது. எனவே அணையில் இருந்து வினாடிக்கு 240 கன அடி உபரி நீர் கமண்டல நதி வழியாக திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மழை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதிப்புகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துத்துறை அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் கனமழையால் பாதித்த இடங்களை கண்காணிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது.
