கான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு திருடன் என்று தவறாக கருதிய கிராம மக்கள் தலித் சமூகத்தை சேர்ந்த ஹரிஓம் வால்மீகி என்ற வாலிபரை சரமாரியாக அடித்து கொன்றார்கள். இந்த சம்பவம் உ.பியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள கொலை செய்யப்பட்ட ஹரிஓம் வால்மீகியின் குடும்பத்தினரை நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேரில் சந்தித்தார். ஹரியோம் வால்மீகியின் தந்தை கங்காதீன், சகோதரர் சிவம் மற்றும் சகோதரி குசும் ஆகியோருடன் ராகுல் சுமார் 25 நிமிடங்கள் பேசினார். அவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்த ராகுல் ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தார்.
பின்னர் பேட்டி அளித்த ராகுல், ‘‘சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி வன்கொடுமை வழக்குகளில் உ.பி நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது” என்றார். இதுதொடர்பாக ராகுல் தனது எக்ஸ் தளத்தில், ‘‘ ஒரு தலித்தாக இருப்பது இன்னும் இந்த நாட்டில் ஒரு கொடிய குற்றமா? ஹரிஓம் குடும்பத்தினர் என்னை சந்திப்பதை தடுக்க உ.பி அரசு முயன்றனர். உ.பி அரசு ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
* பாடகர் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி
சிங்கப்பூரில் உயிரிழந்த பாடகர் ஜூபின் கார்க்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அசாமின் காஹிலிபாராவிற்கு வந்தார். சோனாபூரில் உள்ள கார்க்கின் நினைவிடத்திற்கு சென்ற ராகுல் அங்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜூபினை இழந்து வாடும் குடும்பத்தினரையும் சந்தித்து ராகுல் ஆறுதல் கூறினார்.
