பெங்களூரு: கர்நாடக மாநிலத் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாரைப் பற்றிய ’விசுவாசத்தின் சின்னம் டி.கே.சிவகுமார்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.கே.சிவகுமார், 2019ம் ஆண்டு காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியின்போது 10 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க சபாநாயகரிடம் சென்றனர். அவர்களில் 5-6 எம்.எல்.ஏக்களை நான் பேசி திரும்ப வரவைத்தேன். அந்த சமயத்தில் டெல்லியிலிருந்து எனக்கு போன் வந்தது. எனக்கு யார் போன் செய்தது என்பதை சொல்ல விரும்பவில்லை. பாஜவிலிருந்து ஒருவர் பேசினார். என் தம்பி டி.கே.சுரேஷும் என்னுடன் இருந்தார்.
டெல்லியிலிருந்து பேசிய அந்த பாஜ தலைவர், துணை முதல்வர் ஆகிறீர்களா அல்லது சிறை செல்கிறீர்களா என்று மிரட்டினார். நான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எனது இளம் வயதிலேயே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பங்காரப்பாவின் ஒத்துழைப்புடன் இளம் வயதிலேயே என்னை அமைச்சராக்கினார். எனக்கு போன் செய்த அந்த பாஜ தலைவரிடம் நான் சிறை செல்லவே தயார் என்று கூறினேன். நான் நினைத்திருந்தால் அப்போதே துணை முதல்வர் ஆகியிருக்கலாம். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நான் எனது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் விசுவாசமாக இருப்பேன், என்றார்.
