கிரிக்கெட்டில் புதிய FORMAT டெஸ்ட் 20 அறிமுகமாக உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 20 ஓவர்கள் என 4 இன்னிங்ஸ் (80 ஓவர்கள்) விளையாடும் புதிய ஃபார்மட் கிரிக்கெட் அடுத்தாண்டு ஜனவரியில் அறிமுகமாகிறது. தொழில்முனைவோர் கௌரவ் பஹிர்வானி இதனை அறிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவங்களில் கிரிக்கெட் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது நான்காவதாக ஒரு புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “டெஸ்ட் ட்வெண்டி” என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆழமான வியூகங்களையும் டி20 கிரிக்கெட்டின் அசுரத்தனமான வேகத்தையும் ஒரே நாளில் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதில் அணிகள் தலா 20 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்ஸ்களை விளையாடும். போட்டிகள் வெள்ளை உடையில் சிவப்பு பந்துடன் விளையாடப்படும். ஒரே நாளில் நடைபெறும். போட்டியில் இரண்டு வடிவங்களையும் சிறப்பாக ஒருங்கிணைக்க சில விதி மாற்றங்கள் செய்யப்படும்.
ஒவ்வொரு அணியும் ஒரு போட்டிக்கு ஒரு முறை 4 ஓவர்கள் பவர்பிளேவை வைத்திருக்கலாம். முதல் இன்னிங்ஸில் 75 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றால் ஃபாலோ-ஆனை செயல்படுத்தலாம். போட்டி முழுவதும் அதிகபட்சமாக 5 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம். மேலும் ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சமாக 8 ஓவர்கள் வீசலாம்.
இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியபோது, டெஸ்ட் டி20-ன் நிறுவனர் கௌரவ் பஹிர்வானி தெரிவித்துள்ளதாவது; “இன்றைய தலைமுறையினர் விரும்பும் அனைத்தையும் வழங்கும் ஒரு வடிவத்தை உருவாக்க டெஸ்ட் கிரிக்கெட்டையும் டி20-யையும் இணைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். இதன் ஆலோசனைக் குழுவில் ஏபி டிவில்லியர்ஸ், கிளைவ் லாயிட், மேத்யூ ஹேடன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். 13 முதல் 19 வயதினரை மனதில் வைத்து இந்த FORMAT உருவாக்கப்பட்டுள்ளது.
