தொழிலாளர் நலநிதியை செலுத்த தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவு

திருப்பூர், டிச. 25: திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி வெளியிட்டுள்ள  அறிக்கை:- தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டம் 1972-ன் படி தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலநிதி சட்டம் 1972 பிரிவு 2 (டி)-ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள் மற்றும் 5 அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10 ஒவ்வொரு தொழிலாளிக்கும், வேலையளிப்பவர் பங்காக ரூ.20-ம் என மொத்தம் ரூ.30 தொழிலாளர் நலநிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.

அதன்படி 2020ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை வருகிற 31.1.2021க்குள் செலுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர் நலநிதியை இணையவழியில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி www.lwb.tn.gov.in என்ற வலைதளம் மூலம் செலுத்தலாம். மேலும், வங்கி வரைவோலையாக 31.1.2021 தேதிக்கு முன்பாக  அனுப்பிவைக்கலாம் என கூறியுள்ளார்.

Related Stories: