தவெக பக்கம் தவறு இருக்கிறது: பிரேமலதா

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று ஆறுதல் கூறினார். பின் அவர் அளித்த பேட்டி: இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இப்படி ஒரு உயிர்ச்சேதம் எங்கும் நடைபெறவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களையும் நேரில் சந்தித்தேன்.

அனைவரும் கூறுவது அங்கு குறுகலான பாதை, உரிய பாதுகாப்பு யாருக்கும் தரப்படவில்லை. விஜய் வாகனம் கூட்டத்தை நெருங்கி வரவர கூட்ட நெரிசல் அதிகமாகி உள்ளது. ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வருகின்றன. அப்போது விஜய்யே சொல்கிறார், ‘என்ன, நம் கட்சி கொடியோட ஆம்புலன்ஸ் வருகிறதே’ என்று. அந்த ஆம்புலன்ஸ்கள் யாருடையது? இதற்கு யார் பொறுப்பேற்பது?.

சிகிச்சை பெறுபவர்களிடம் கேட்டதற்கு, காலதாமதம், குறுகலான பாதை, கரூர் பவர் கட், போலீஸ் தடியடி, தவெக கொடியுடன் ஆம்புலன்ஸ் ஆகிய காரணங்களால்தான் உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. தவெகவும் இதை உணர வேண்டும். விஜய் எப்படி வாகனத்தில் மேலே ஏறி பேசும்போது நான்கு பேர் பாதுகாப்பு இருக்கிறதோ அதேபோல் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இனி இதுபோன்று தமிழகத்தில் நடக்கக்கூடாது. தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவன குறைவு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: