கொல்கத்தாவில் பேய் மழை; மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அலட்சியம்?

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 22ம் தேதி இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 332 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பிகள் மீது மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் புறநகர் பகுதிகளிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உயிரிழப்புகளுக்கு கொல்கத்தா மின்சார விநியோகக் கழகத்தின் அலட்சியமே காரணம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, வரும் 25ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: