புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை ஊட்டி ஓட்டல், ரெசார்ட் உரிமையாளர்கள் அப்செட்

ஊட்டி,டிச.23: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரியில் உள்ள ஓட்டல் மற்றும் ரெசார்ட் உரிமையாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக, வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புத்தாண்டை இங்கு கொண்டாட வருவது வழக்கம்.

இதற்காக, இங்குள்ள ஓட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகளை செய்யும். இரவு நேர ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், சினிமா நட்சத்திரங்களை கொண்ட கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் நடக்கும்.இதற்காக பல ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை இருந்தது.

இதனால், அனைத்து ஓட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகள் மூடப்பட்டன. தற்போது சுற்றுலா பயணிகள் வருவதற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள் என ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழக அரசு ஓட்டல் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதித்துள்ளது.

இதனால், புத்தாண்டை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பில்லை. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், புத்தாண்டு வியாபாரமும் பாதிக்கும் என்பதால் ஊட்டியில் உள்ள ஓட்டல் மற்றும் ரெசார்ட் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: