மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருவண்ணாமலை, டிச.22: மின்வாரியத்தில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை, தனியார் மூலம் நிரப்பும் நடவடக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, பணி நிரந்தரம் இல்லாமல் பல ஆண்டுகளாக போராடி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது. அதோடு, படிப்படியாக மின்வாரியம் தனியார் மயமாக்கப்படும் நடவடிக்கையின் தொடக்கமாக இது அமைந்திருப்பதாக மின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

தனியார் மூலம் பணி நியமனம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், தொழிலாளர் சம்மேளனம் சம்பத், சிஐடியு சிவராஜன், பாலாஜி மற்றும் தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். போராட்டத்தை முன்னிட்டு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: