கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!!

மதுரை : கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர். மேலும் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் குழு அமைத்தது குறித்த அரசாணையை தமிழக அரசு தாக்கல் செய்தது.

அதே போல் கொடி கம்பங்கள் அமைப்பதற்காக அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்காக சாலையின் நடுவே கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என்ற வழிகாட்டு நெறிமுறை இடம்பெற்றிருந்தது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், “கொடிக்கம்பங்கள் குறித்த கட்டுப்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை அக்.15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: