மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் இணைப்பு வாகனம் இயக்க துணை நிறுவனம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் இணைப்பு வாகனங்களை இயக்க துணை நிறுவனம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்கட்டத்தில் பச்சை மற்றும் நீலம் என 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. தற்போது, மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரியாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.

இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடியும்போது, பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பயணிகள் தடையின்றி வந்துசெல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு வாகனங்கள் இயக்கும் விதமாக, தனியாக துணை நிறுவனம் அமைக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் பயணிகளின் வருகை அதிகரிக்க இணைப்பு வாகன வசதி முக்கியமானதாக உள்ளது. மாநகர பேருந்துகள், சிற்றுந்துகள் மட்டுமே போதாது. எனவே, தனியாக புதிய துணை நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஒப்புதல் கிடைத்தவுடன், கால்டாக்சி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த கட்டத்தில் 500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: