ரூ.3 கோடி மோசடி வழக்கில் அதிமுக மாஜி அமைச்சருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ரூ.3 கோடி மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர், கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இதில், ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளிவந்தார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திர பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராகினர். அவர்களுக்கு 2 வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக். 10ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

Related Stories: