சண்டிகர்: மாநில மக்களுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வௌியிட்ட அறிக்கையில், ‘‘ இதுவரை பஞ்சாபில் 1.53 கோடி மக்கள் ரேஷன் பெற்று வந்தனர், ஆனால் பாஜ அரசு 55 லட்சம் பேருக்கு இந்த வசதியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மூன்று ஏழைக் குடும்பங்களில் ஒன்று ரேஷன் பொருட்களைப் பெற முடியாமல் தவிக்கிறது. இது பஞ்சாபின் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண குடும்பங்களின் உணவு தட்டுகள் மீதான நேரடித் தாக்குதலாகும். ஜூலை முதல், பஞ்சாபின் 23 லட்சம் ஏழை மக்களுக்கு இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கவில்லை என்று கூறி ரேஷன் பொருட்களை நிறுத்தியுள்ளது.
செப்டம்பர் முதல் சுமார் 32 லட்சம் பஞ்சாபியர்கள் ஏழைகள் இல்லை என்று கூறி, அவர்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்களை பாஜ நிறுத்தப் போகிறது. மொத்தம் 55 லட்சம் ஏழைகளின் ரேஷன் பொருட்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
சற்று யோசித்துப் பாருங்கள்; பஞ்சாப் மக்கள் உணவு தானியங்களை பயிரிட்டு முழு நாட்டிற்கும் உணவளிக்கிறோம். ஒன்றிய அரசு அதே பஞ்சாபியரின் உணவு தட்டில் இருந்து ஒரு துண்டு ரொட்டியை எடுக்க முனைந்துள்ளது.இது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
