எடப்பாடி பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

அணைக்கட்டு: எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் கடந்த 18ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அங்குள்ள எம்ஜிஆர் சிலை அருகே இரவு 10.18 மணிக்கு பேச தொடங்கியபோது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்தது.

உடனே ஆம்புலன்சை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, அதில் நோயாளிகள் உள்ளார்களா? என பார்க்கும்படி கட்சியினரிடம் கூறினார். மேலும், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை திட்டமிட்டே அனுப்புகிறீர்கள் எனக்கூறியதுடன், அடுத்த முறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு இடையூறாக வந்தால், ஆம்புலன்சை ஓட்டி செல்பவர் அதில் பேஷண்டாக செல்வார் என டிரைவரை நேரடியாகவே மிரட்டினார்.

போலீஸ் விசாரணையில், அந்த ஆம்புலன்ஸ் பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மறுநாள் ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையே ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர் அணைக்கட்டு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத 5 நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: