இருமொழி கொள்கையால் உலகளவில் தடம் பதிக்கும் தமிழர்கள் எம்பி பேச்சு செய்யாறு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு, ஆக.23: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா 3வது கட்டமாக கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி முன்னிலை வகித்தார். தமிழ் துறை தலைவர் பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்பி எம்.எஸ்‌.தரணிவேந்தன் பங்கேற்று 1,110 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: ஒரு காலத்தில் பட்டம் பெறுவது என்பது கிராமங்களில் ஒருவரோ, இருவருரோ இருப்பார்கள். பெரியார் அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களின் கல்வி கொள்கையாலும், பல்வேறு திட்டங்களாலும் ஏராளமானோர் பட்டம் பெற்று வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே பட்டம் பெற்று வந்த நிலையில், அனைத்து சமுதாய மக்களும் இன்று பட்டம் பெறுகின்றனர். அம்பேத்கர் பட்டம் பெற்றதால், இந்தியாவிற்கான சட்டத்தை இயற்றினார். அதன் அடிப்படையிலேயே இன்று அனைவரும் கல்வி பயின்று பட்டம் பெற்று வருகிறோம்.

தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் அதிக அளவில் பட்டம் பெற்று வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பலரும் கல்வி பயில சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு பட்டத்தோடு நின்று விடாமல் இலக்கை நோக்கி தொடர்ந்து படியுங்கள். மத்திய அரசின் மும்மொழி கொள்கையால் அஸ்ஸாம், ஒடிசா, பிகார் போன்ற வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையால் தாய்மொழி தமிழோடு ஆங்கிலம் பயின்றவர்கள் இன்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்து தடம் பதித்து வருகின்றனர். தாய்க்காக, தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக சேவை செய்திடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார், திராவிட முருகன், ராஜ்குமார், திமுக பிரமுகர்கள் ராஜேந்திரன், திலகவதி ராஜ்குமார், ராம் ரவி, மணிவண்ணன், சேகர், பாபு, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேதியல் துறை தலைவர் உமா நன்றி கூறினார்.

Related Stories: