கால்நடை ஆராய்ச்சி மையத்தில் கோழி வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

தர்மபுரி : தர்மபுரி அருகே குண்டலபட்டியிலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அகில இந்திய ஒருங்கிணைந்த கோழி இனப்பெருக்க ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியால் பெண் விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரயின் முதல்வர் திருவேங்கடன் தலைமை வகித்தார்.

பேராசிரியர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் தரம் உயர்த்தப்பட்ட கோழி இனங்கள், அவற்றுக்கான கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் மேலாண்மை, உயிர் பாதுகாப்பு வழிமுறைகள், குஞ்சுகளின் இளம்வயது பராமரிப்பு மற்றும் கால்நடைகளுடன் சேர்த்து கோழி வளர்ப்பை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து செயல்விளக்கங்களுடன் பயிற்சியும், தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது.

மேலும், விவசாயிகள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடலும் நடந்தது. பயிற்சியில், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் முரளி, செந்தமிழ்பாண்டியன், ராஜேந்திரகுமார் மற்றும் கண்ணதாசன் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியின் ஒரு பகுதியாக மழை காலத்தில் கோழிகளை பராமரிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற 43 விவசாயிகளுக்கு தீவன இடுப்பொருட்கள் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. மையத்தின் தலைவர் ராஜேந்திரகுமார் ஒருங்கிணைத்தார்.

Related Stories: