திருவண்ணாமலை, ஆக.21: திருவண்ணாமலையில் ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண் போலீசின் தங்கச்சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படைப் பிரிவில் போலீசாக பணிபுரிபவர் சுரேஷ் மனைவி கலையரசி(28). இவர், அங்குள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கலையரசி தன்னுடைய தாய் வீடான பாடகம் கிராமத்துக்கு சென்றுவிட்டு திருவண்ணாமலைக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலை- வேலூர் சாலையில் புரட்சி நகர் பகுதியில் பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள், கலையரசி கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர். அவர்களை கலையரசி விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலிசில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பெண் போலீசிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
