மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்.9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28ம் தேதி பைனலில் மோதும்.
லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பாகிஸ்தான், 19ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில்(துணை கேப்டன்), திலக்வர்மா, சஞ்சு சாம்சன், ஜிதேஷ்சர்மா(வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்சித் ரானா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே, ரிங்குசிங் ஆகிய 15பேர் இடம் பெற்றனர்.எதிர்காலத்தில் இந்திய அணியின் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் சுப்மன்கில்லை கேப்டனாக நியமிக்கும் பொருட்டு டி.20அணியின் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி தேர்வுக்கு பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “கடைசியாக கில் சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடியது என்னுடைய தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில்தான். அப்போது அவர் துணை கேப்டன் ஆகவும் இருந்தார். நாங்கள் டி20 உலகக் கோப்பை முதல் சுழற்சியை அங்கிருந்துதான் ஆரம்பித்தோம். பிறகு டெஸ்ட் தொடர்களில் பிஸி ஆகிவிட்டார். மேலும் அவர் அடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட சென்று விட்டதால் டி20 தொடர்களில் விளையாட முடியவில்லை. பிறகு அவர் மீண்டும் வந்ததும் அவருடைய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கில் அணியில் இருக்கிறார். நாங்கள் அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு நாங்கள் விளையாடும் பெரிய தொடர் இதுவாகும். அடுத்து டி20 உலகக் கோப்பை விளையாடுவதற்கு முன்பாக நமக்கு நிறைய டி20 போட்டிகள் இருக்கின்றன. அதற்கான பயணம் இங்கிருந்து துவங்குகிறது’’, என்றார்.
ஸ்ரேயாசை யாருடைய இடத்தில் தேர்வு செய்வது?
ஐபிஎல் தொடரில் அதிக ரன் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.இதுபற்றி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது: “நாங்கள் ஸ்ரேயாஸ் ஐயரை மதிக்கிறோம். ஆனால் அவரை யாருடைய இடத்திற்கு தேர்வு செய்வது?. இது எங்களுடைய தவறும் கிடையாது. அவருடைய தவறும் கிடையாது. மேலும் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய முடியாதது துரதிர்ஷ்டவசமானது. அபிஷேக் சர்மா தற்போது சிறப்பாக பேட்டிங் செய்கிறார். மேலும் அவரால் பந்து வீசவும் முடியும். இந்த காரணத்தால் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய முடியவில்லை. இதுவே தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் நடந்தது. இதில் யாருடைய தவறும் கிடையாது. கில்லை தேர்வு செய்திருப்பதன் மூலம் தொடக்க வீரர்களுக்கான பரிசீலனையில் மேலும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சில மாதங்களாக சுப்மன் கில் அபார பார்மில் உள்ளார். துபாய் சென்றதும், எதிரணி மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவனை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.
ரிசர்வ் வீரர்களில் வாஷிங்டன்;
ஆசிய கோப்பை தொடருக்கு மாற்று வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் இல்லாதது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ்;
ஆசிய கோப்பைக்கான அணியில் ஸ்ரேயாஸ் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், உள்நாட்டு போட்டிகளில் அவரது தொடர்ச்சியான செயல்திறனுக்கு விரைவில் பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். 30 வயதான அவர் வெ.இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவனில் சஞ்சுக்கு இடமில்லை….
ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டதன் அர்த்தம், அவர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதாகும். வேறு எந்த இடமும் காலியாக இல்லாததால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது, என கூறிஇருக்கிறார்.
ஆசிய கோப்பையில் இந்திய போட்டிகள்
* செப். 10 யுஏஇ v இந்தியா, துபாய்
* செப்.14 இந்தியா v பாகிஸ்தான், துபாய்
* செப். 19 இந்தியா v ஓமன், துபாய்
சூப்பர் 4 சுற்று;
செப். 20-26 அபுதாபி, துபாய்
பைனல்: செப். 28 துபாய்
