ஆரணி, ஆக. 20: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வழங்கல், விற்பனை சங்கம் சார்பில் ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி சந்தை நிகழ்ச்சி ஆரணி அடுத்த இரும்பேடு டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை தாங்கினார். வட்டார இயக்க மேலாளர்கள் சத்தியராஜ், அருள்மொழி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேன்மொழி, ரேகா, சிவகாமி, ஆனந்தி, லட்சுமி முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வரி வரவேற்றார்.
இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.தனபதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது, ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் உள்ள 75 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி செய்த, கைவினைப் பொருட்கள், செயற்கை ஆபரண பொருட்கள் மாணவர்களுக்கு கல்லூரி சந்தை மூலம் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி மகளிர் சுய உதவிக் குழுகள் உற்பத்தி செய்த பொருட்களை பார்வையிட்டு, சுயஉதவி குழுக்களின் வாழ்வாதாரம், விற்பனை அதிகரிப்பது குறித்தும், மாணவிகள் கல்லூரி முடித்து தங்கள் வீட்டிலேயே சுயஉதவி குழுக்கள் மூலமாக புதிய சுயதொழில் தொடங்குவது, தொழில் முனைவராவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து, சுயஉதவி குழுக்கள் கொண்டுவந்து காட்சிப் படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனையை தொடங்கி வைத்தார். முடிவில், மகளிர் திட்ட மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். கல்லூரி சந்தை நிகழ்ச்சி நேற்று தொடங்கி நாளை வரை என 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
