பெண் டாக்டரை தொடர்ந்து ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஹிரண்தாஸ் முரளி (29). பிரபல ராப் இசை பாடகர். இவர் ராப்பர் வேடன் என்று கேரளாவில் அழைக்கப்படுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா, புலி நகம் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் ராப்பர் வேடன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்ததாக கொச்சியை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் புகார் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கொச்சி திருக்காக்கரை போலீசார் ராப்பர் வேடன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே ராப்பர் வேடன் தங்களையும் பலாத்காரம் செய்ததாக கூறி 2 இளம்பெண்கள் புகார் கொடுத்துள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பேரும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகார்களை அவர் கேரள டிஜிபியிடம் அனுப்பி வைத்துள்ளார்.

Related Stories: