கொள்முதல் செய்து 3 மாதங்கள் ஆன நிலையில் நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்கவில்லை: விவசாயிகள் புகார்

காஞ்சிபுரம், ஆக.19: கம்மாளம் பூண்டி கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்க வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கம்மாளம் பூண்டி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 6 விவசாயிகளுடமிருந்து, கடந்த மே மாதம் 28ம்தேதி சுமார் 650 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்துவிட்டு, விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்படவில்லை. ேமலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 3 மாத காலமாக விவசாயிகளுடைய வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை.

இது சம்பந்தமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஆர்எம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, உங்களுடைய நெல் மூட்டைகளுக்கு உண்டான பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்துவிடும், நெல் கொள்முதல் செய்த உங்களுடைய கணக்குகள் அனைத்தும் நான் அரசிடம் ஒப்படைத்து விட்டேன். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை எண்ணிக்கை கணக்கு ரசீதை உங்களுக்கு வழங்குகிறேன் என்று சொல்கிறாரே தவிர, இதுநாள் வரை அரசு நெல் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு ரசீது வழங்கப்படவில்லை. வங்கிக் கணக்கில் பணமும் வரவு வைக்கபடவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு அரசு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க மேலான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: