ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஆதார் விபரம் கேட்கவில்லை: ஐகோர்ட் கிளையில் திமுக வாதம்

மதுரை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் விபரம் கேட்கவில்லை என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடந்து வருகிறது. திமுகவினர் பொதுமக்களிடம் இருந்து எந்தக் காரணத்துக்காகவும் ஆதார் விபரங்களை சேகரிக்கக் கூடாது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் ஆதார் தலைமைச் செயல் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ஓடிபி எண்ணை பெறுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்துது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ‘‘ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது ஆதார் அட்டை விபரத்தை யாரும் வாங்கவில்லை. ஆனால், ஆதார் விபரங்கள் பெறப்படுவதாக திட்டமிட்டு அதிமுகவினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதைப்போல உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரிய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உணவு டெலிவரி நிறுவனத்தினர் ஓடிபி பெறுவதைப் போலத்தான், ஓடிபி எண் வாங்கப்படுகிறது. ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கப்படவில்லை. எனவே, ஓடிபி எண் பெறுவதற்கான தடையை நீக்க வேண்டும்’’ என்றார். மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘திமுக தரப்பில் ஆதார் விபரங்கள் கேட்கப்படவில்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘திமுக தரப்பில் ஆதார் விபரங்கள் கேட்கப்படவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 21க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: