கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கு; வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டோருக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கில் சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார். பிரபலமானவர் என்பதால் மாஸ்டர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜரானால், குழப்பங்கள் ஏற்படும். எனவே, தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். அக்டோபர் 20ம் தேதியில் இருந்து டிசம்பர் 10ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால் அங்கு வாக்குமூலம் அளிக்க தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்று, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் பட்டியலில் இருந்து வழக்கறிஞர் ஆணையரை தேர்வு செய்வதாக தெரிவித்தார். தோனி வாக்குமூலம் பதிவு முடிந்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

Related Stories: