திருவண்ணாமலை புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னைதிருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள கோயிலின் நிலத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளை தொடரக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆரணி வட்டத்தில் உள்ள தங்கள் புதுப்பாளையம் கிராமத்தில் அமிர்தவள்ளி அம்மன் உடனுறை ஆதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் புறம்போக்கு நிலத்தை சேர்த்து புதுப்பாளையம் ஊராட்சி மன்றத்துக்கு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை ஊராட்சி செயலாளர் மேற்கொண்டுள்ளார்.
கோயிலின் அருகில் கட்டப்படும் கட்டிடத்தால் கோயிலுக்குள் சென்றுவருவது, புனரமைப்பு நேரத்தின்போது நடைபெறும் பணிகள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படும்.

கூட்டம் நெரிசல் ஏற்பட்டு பக்தர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவில் நிலத்தில் கோவிலுக்கு அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படுவதை ஆட்சேபித்து ஊர் பொதுமக்கள் திரண்டு ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் நடைமுறையில் மேற்கொண்டு பணிகளை தொடர முடியாத வகையில், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

 

Related Stories: