ஆணவக் கொலையில் தந்தை, மகனை 2 நாள் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27), ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில், நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஹேமா நேற்று விசாரித்தார். அப்போது சுர்ஜித், சரவணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹேமா, தந்தை, மகனை 2 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி, நாளை மாலை 6 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து சுர்ஜித், அவரது தந்தை சரவணனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

சுர்ஜித்தின் தந்தை சரவணன் நீதிமன்றத்தில் கூண்டில் ஏறியதில் இருந்தே கண் கலங்கி நின்றார். நீதிபதியின் கேள்விகளுக்கு தளுதளுத்த குரலில் பதிலளித்தார். சிபிசிஐடி எஸ்பி ஜவஹர் இன்று நெல்லை வந்து சுர்ஜித், சரவணன் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்க உள்ளார்.

Related Stories: