பாங்காக்: தாய்லாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை போட்டியில் (யு19) இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகள் நிஷா, முஸ்கன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். தாய்லாந்தின் பாங்காக் நகரில், 19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்ற குத்துச் சண்டை போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். நேற்று நடந்த 54 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த நிஷா, சீன வீராங்கனை சிருய் யாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
57 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை முஸ்கன், கஜகஸ்தான் வீராங்கனை ஆயாஸான் எர்மெக்கை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தவிர, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த 5 வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்தையும், 2 பேர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். இன்று நடக்கும் ஆடவர் இறுதிப் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் மோதவுள்ளனர். எனவே, மேலும் சில தங்கப் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.
