வைகுண்ட ஏகாதசி திருவிழா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் 25ல் ரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி, டிச.4: ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: ரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி வரும் ஜன.4ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு வரும் 25ம் தேதி அன்று அதிகாலை நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி சார்பில் ரங்கம் பஸ்கள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பஸ்களில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ரங்கம் நகரம் முழுவதும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். திருவிழா முடியும் நாள் வரையில குடிநீர் குழாய்களில் தண்ணீர்விட ஏற்பாடு செய்திட வேண்டும். தந்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கழிவறைகள், சிறுநீர் கழிப்பிடங்கள் அமைத்திட வேண்டும்.

அம்மா மண்டபம், கொள்ளிடம் படித்துறைகளில் மக்கள் இரவு, பகல் எந்நேரமும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்க வேண்டும். மின்வாரியம் சார்பில் சீரான முறையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். ரயில்வே நிலையத்தில் திருவிழா தொடர்பான விளம்பரங்களை அமைக்க ரயில்வே துறை அனுமதிக்க வேண்டும். தீயணைப்புத் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கையாக ஆலயத்தினுள் தகரப்பந்தல் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும். கூடுதல் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அம்மா மண்டபம் படித்துறையில் ரப்பர் படகு மூலம் கண்காணித்திட வேண்டும். வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேரமும் மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

மேலும், போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்திடவும், நெரிசலை கட்டுப்படுத்திடவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்க வேண்டும். உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனம் செய்திட அனுமதித்திட வேண்டும். ரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். மாநகர கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் வேதரத்தினம், டிஆர்ஓ பழனிகுமார், சப்கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணா, ரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தாசில்தார் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: