காரில் ரூ.2 கோடி சாமி சிலை கடத்தி வந்த 7 பேர் கைது: தஞ்சை அருகே போலீஸ் அதிரடி

தஞ்சை: தஞ்சை அருகே ரூ.2 கோடி சாமி சிலையை காரில் கடத்தி வந்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு நேற்றுமுன்தினம் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் சிலை கடத்த முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தஞ்சை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் காரில் பழங்காலத்தை சேர்ந்த இரண்டரை அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன பெருமாள் சிலை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52), கும்பகோணம் ராஜ்குமார்(36), திருவாரூர் தினேஷ்(28), ஜெய்சங்கர்(58), கடலூர் விஜய்(28), டூவிலர்களில் நின்ற தஞ்சை ஹாரிஸ்(26) மற்றும் கடலூர் அஜித்குமார்(26) ஆகிய 7 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல்கள் வருமாறு: தினேஷின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த சிலை கிடைத்துள்ளது.

இது பற்றி தாசில்தார், விஏஓவிடம் தெரிவிக்காமல் தனது கால்நடை கொட்டகையில் மறைத்து வைத்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு, தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சிலையை வெளிநாட்டுக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதற்காக தனது நண்பர்களுடன் சிலையை எடுத்துச்சென்ற போது போலீசில் சிக்கி உள்ளனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சிலை விற்பனை முயற்சியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, சிலையை எந்த ஊருக்கு எடுத்துச்சென்றனர் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post காரில் ரூ.2 கோடி சாமி சிலை கடத்தி வந்த 7 பேர் கைது: தஞ்சை அருகே போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: