4 மாநில தேர்தல் முடிவுகள் வௌியான நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவி பறிக்கப்படுமா?

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவியை பறிக்கும் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிச. 4ம் தேதி(இன்று) தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 19 நாட்கள் நடைபெறும் கூட்டத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெறும். முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்தினார். இதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த 2ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் கொடுக்கும் தொந்தரவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதே சமயம் அவை சுமூகமாகநடத்த ஆளும்கட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் முடிவுகள் ெவளியான மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

தொடக்க நாளான இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவியை பறிக்கும் நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று அந்த அறிக்கை மீது விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடந்தால் மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை கொண்டு வர பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு நீட்டிப்பதற்கான இரண்டு மசோதாக்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள், காஷ்மீருக்கு குடியேறியவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் பலத்தை 107-லிருந்து 114 ஆக உயர்த்துவதற்கான மசோதா, தற்காலிக வரி வசூல் மசோதா, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா, ெடல்லியின் தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) இரண்டாவது (திருத்தம்) மசோதா, மத்திய பல்கலைக்கழக (திருத்த) மசோதா, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, தபால் அலுவலக மசோதா, ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதாவும், மக்களவையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post 4 மாநில தேர்தல் முடிவுகள் வௌியான நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவி பறிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: