வங்கியிலிருந்து ரிவார்டு வந்திருப்பதாக வாலிபரிடம் நூதன முறையில் 44 ஆயிரம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை


பெரம்பூர்: புளியந்தோப்பில் ஒரு வாலிபரிடம் வங்கியிலிருந்து ரிவார்டு வந்திருப்பதாக கூறி, அவரது வங்கி கணக்கிலிருந்து மர்ம கும்பல் நூதன முறையில் ₹44 ஆயிரத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், இதுபோன்ற குறுந்தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம் எனவும் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு, டிமெல்லர்ஸ் சாலையில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பங்கஜ் (34). இவர், அண்ணாசாலையில் ஒரு தனியார் எலக்ட்ரானிக் கடையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது செல்போனில் எஸ்பிஐ வங்கியிலிருந்து வருவது போல் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதை பங்கஜ் திறந்து பார்த்தபோது, உங்களது வங்கி கணக்குக்கு ரிவார்டு வந்துள்ளது என்ற குறுந்தகவல் இருந்துள்ளது. மேலும், அவரது வங்கி கணக்குகளின் விவரங்களை ஆன்லைன் மூலமாக அனுப்பும்படி மர்ம கும்பல் கேட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தனது செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரை பங்கஜ் கிளிக் செய்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மர்ம கும்பல் ₹44 ஆயிரத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து தங்கசாலை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் பங்கஜ் புகார் அளித்து, பின்னர் புளியந்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும், தங்களின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் வரும் எந்தவொரு தேவையில்லாத குறுந்தகவல்களை தொடவேண்டாம். ஓடிபி உள்பட பல்வேறு விவரங்களை கையாளும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். எனினும், இதேபோல் வங்கியில் இருந்து மெசேஜ் வருவது போல் குறுந்தகவல்களை அனுப்பும் மர்ம கும்பலிடம் பொதுமக்கள் பணத்தை இழப்பது வாடிக்கையாக மாறியுள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.

 

The post வங்கியிலிருந்து ரிவார்டு வந்திருப்பதாக வாலிபரிடம் நூதன முறையில் 44 ஆயிரம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: