30 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி சட்ட சிக்கல் காரணமாக தெருநாய்களை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை, நவ.25: சட்ட சிக்கல் காரணமாக தெருநாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது, என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ராயபுரம், ஜி.ஏ சாலையில் கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது, அங்கு இருந்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை பார்த்து குறைந்து கொண்டிருந்தது, ஒரு கட்டத்தில் அனைவரையும் விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கால் தவறி கீழே விழுந்தனர். அப்போது, தெருநாய் கடித்ததில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனிடையே அந்த நாயை அப்பகுதியில் உள்ளவர்கள் கல்லால் தாக்கி அடித்துக் கொன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அந்த தெருநாயின் உடலை பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள், அந்த நாயை பரிசோதித்த போது, ரேபிஸ் தொற்று உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘30 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தெரு நாய்களை கொல்லக் கூடாது, கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலே விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சட்ட சிக்கலால் தெருநாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. இப்பிரச்னையில் முழுமையான தீர்வு காண வேண்டுமானால் சட்டவிதிகளில் திருத்தம் தேவை அதேபோல பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை நாயை கருத்தடை செய்யக் கூடாது எனவும் சட்டவிதிகள் கூறுகின்றன. இவ்வாறு கருத்தடை செய்து விடப்படும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றெல்லாம் கூறமுடியாது.

தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்தாலும், மக்கள் தடுப்பூசி போட்டு தான் ஆக வேண்டும். இதில் தவறிவிடப்பட்டு, கருத்தடை செய்யாமல் விடப்படும் எந்த ஒரு நாயும் சுமார் 6 முதல் 7 குட்டிகளை ஈன வாய்ப்புண்டு. இதனால் மீண்டும் அதே தெருக்களில் நாய்களின் கும்பல் பரவலாக சுற்றித் திரியும். இதுவரை சென்னை மாநகராட்சியில் மட்டும் 8 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது சென்னையில் 3 புதிய கருத்தடை மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர் தெரு வோரங்களில் பட்டினியாக கிடக்கும் நாய்களுக்கு உணவை அளித்துவிட்டு, பெரும் நன்மை செய்துவிட்டதாக கருதி சென்றுவிடுகின்றனர். உண்மையான கால்நடை ஆர்வலர்களாக இருந்தால், நாய்களை தத்தெடுத்து வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல் பாதுகாத்து, பராமரித்து, நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்தும் போது எப்போதும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். நாய்கள் பதற்றத்தை உணரும் தன்மை கொண்டவை. வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டும்,’’ என்றார்.

The post 30 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி சட்ட சிக்கல் காரணமாக தெருநாய்களை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: