பம்மல் நகராட்சி பகுதியில் மக்களை அச்சுறுத்தும் சேதமடைந்த மின்கம்பம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் பல ஆண்டுகளாக பராமரிக்காததால், சேதமடைந்து எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கிறது. குறிப்பாக பம்மல் 21வது வார்டு பகுதியான அப்துல்கலாம் தெருவின் பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் கடுமையாக சேதமடைந்து, உள்ளே உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிந்த நிலையில், அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், எந்த நேரத்தில் மின்கம்பம் சரிந்து விழுந்து, பெரிய அளவில் மின்விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே உள்ளனர்.

இதுகுறித்து பம்மல் மின்வாரிய அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மாறாக, மின்வாரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், புதிதாக மின்இணைப்பு எடுக்க அணுகும் தனிநபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கையூட்டாக பெற்றுக்கொண்டு, உடனடியாக புதிய மின் இணைப்பு வழங்குவதாக கூறப்படுகிறது.

மாறாக மக்களுக்கு சேவை செய்ய பம்மல் மின்வாரிய அதிகாரிகள் தயங்குகின்றனர். அவ்வாறு பணம் தருபவர்களுக்கு மட்டுமே வேலை செய்வோம் என்பது போல், மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி,

பம்மல் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருவதால், உண்மையிலேயே மின்வாரிய அலுவலகம் என்பது மக்களுக்கான அரசு அலுவலகமா அல்லது தனிநபர் ஏஜென்ஷியா என்று எண்ணத் தோன்றுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனைபட்டனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பம்மல், அப்துல்கலாம் தெருவில் சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றித் தர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: