12-14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி பணி தொடங்கியது: 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதேபோல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது. படிப்படியாக முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டோர் என தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதுவரை  கோவாக்சின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், 12 வயது முதல் 14 வயது பிரிவினருக்கு முதல் முறையாக ஐதராபாத் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது, 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகின்றது. முதல் டோஸ் தடுப்பூசியாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில் எது செலுத்தப்பட்டுள்ளதோ அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோசாக இவர்களுக்கு செலுத்தப்படும். ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில், 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ் பெற முடியும். ஒன்றாக இணைந்து நாட்டை பாதுகாப்போம். தடுப்பூசி போட்டுக் கொள்வோம்,’ என்று  கூறியுள்ளார்.* கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு கோவின் செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும்.* தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தேதியில் சம்பந்தப்பட்ட சிறார்கள் 12 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.* தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினரின் கோவின் செயலி அல்லது தனிப்பட்ட மொபைல் எண் மூலமாகவோ புதிய கணக்கை உருவாக்கி பதிவு செய்யலாம்.* 60 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டாவது கொரோனா தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் முதல் 39 வாரங்கள் முடிவடைந்து இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்….

The post 12-14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி பணி தொடங்கியது: 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் appeared first on Dinakaran.

Related Stories: