தேர்தலில் வென்று ஒருமாதம் கழித்து 2 திரிணாமுல் எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம்

கொல்கத்தா: தேர்தலில் வென்று ஒருமாதம் கழித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டு பேருக்கு சபாநாயகர் பீமன் பானர்ஜி நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தலின்போது சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பாகபங்கோலா தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் சர்கார் மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பராநகர் தொகுதியில் சயந்திகா பானர்ஜி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இருவரையும் கடந்த மாதம் ராஜ்பவனில் பதவியேற்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டனர். இந்நிலையில் திரிணாமுல் எம்எல்ஏக்கள் இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்தபோஸ் நேற்று முன்தினம் இரவு திடீரென அதிகாரம் அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் திடீரென துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி, அவையில் சபாநாயகர் இருக்கும்போது துணை சபாநாயகர் பதவி பிரமாணம் செய்துவைப்பது விதிமுறைக்கு எதிரானது என்று கூறி விலகினார். இதனை தொடர்ந்து அவரது கோரிக்கையை ஏற்று சபாநாயகர் பீமன் பானர்ஜி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் எம்எல்ஏக்கள் ராயத் ஹொசன் சர்க்கார் மற்றும் சயந்திகா பானர்ஜி ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஆளுநர் ஆனந்தபோஸ் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post தேர்தலில் வென்று ஒருமாதம் கழித்து 2 திரிணாமுல் எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் appeared first on Dinakaran.

Related Stories: