10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் சாதனை: வெண்கலம் வென்று அசத்தல்

பாரிஸ்: ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. சுதந்திரத்துக்கு பின்னர், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் மனு பாக்கருக்கு கிடைத்துள்ளது. 3வது இடத்துக்காக தென் கொரியாவின் லீ வான்ஹோ – ஓஹ் யே ஜின் ஜோடியுடன் நேற்று மோதிய மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் இது.

முன்னதாக, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவிலும் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் ஹாட்ரிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பும் மனு பாக்கருக்கு உள்ளது. அடுத்து அவர் ஈஷா சிங்குடன் இணைந்து 25 மீட்டர் பிஸ்டல் போட்டியிலும் களமிறங்க உள்ளார். இந்தியாவுக்காக 2வது பதக்கம் வென்று அசத்தியுள்ள மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

* சைக்கிளில் 22,000 கி.மீ. பயணம்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவின் ரசிகர் கேரளாவை சேர்ந்த சைக்ளிங் வீரர் பயிஸ் அஸ்ரப் அலி. புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் தங்கம் வென்றபோது முதல் முறையாக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அஸ்ரப் அலி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியைக் காணவும் நீங்கள் வரவேண்டும் என்ற நீரஜின் அழைப்பை ஏற்ற அஸ்ரப் அலி 2 ஆண்டுக்கும் மேலாக 30 நாடுகள் வழியே சைக்கிளிலேயே 22,000 கி.மீ பயணம் செய்து தனது அபிமான வீரரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

* பல்ராஜ் ஏமாற்றம்
ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் துடுப்புப் படகு ஸ்கல்ஸ் பிரிவு காலிறுதியில் பங்கேற்ற இந்தியாவின் பல்ராஜ் பன்வார் (25 வயது, ராணுவ வீரர்), பந்தய தூரத்தை 7 நிமிடம், 5.10 விநாடிகளில் கடந்து 5வது இடம் பிடித்தார். இதனால் பதக்க வாய்ப்பை இழந்த பல்ராஜ் 13-24வது இடத்துக்கான போட்டியில் கலந்துகொள்கிறார்.

The post 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் சாதனை: வெண்கலம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: