கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்

திருவாரூர், பிப்.25: கட்டுமானத் துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்திட வேண்டும் என கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் திருவாரூரில் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நலவாரிய தலைவருமான பொன்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் சேகர், செந்தில் அரசன், ஜெயமுருகன், ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அரசின் நில வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, பதிவு கட்டணம் உயர்வு காரணமாக நிலம் மற்றும் மனைகளின் பத்திரப்பதிவு பெருமளவு குறைந்து கட்டுமானத் தொழிலும் , மனைதொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டண உயர்வினை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், வீட்டு மனைகளுக்கான மனைப்பிரிவு வரைபட அனுமதி ஒருங்கிணைந்த விரிவான ஒற்றை சாளர முறையில் எளிமையாகவும், விரைவாகவும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், கிராமப்புறங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 600 முதல் 1000 சதுர அடி கொண்ட மனைகளுக்கும் அரசு அனுமதி வழங்கிட வேண்டும், கட்டுமானத்திற்கு அத்தியாவசிய தேவையான மணல் என்பது தட்டுப்பாடு காரணமாக விலை ஏற்றம் ஏற்பட்டு கட்டுமான தொழில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது, எனவே மணல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சட்டத்திற்கு உட்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் தேவையான இடங்களில் மணல் குவாரிகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்வது.கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் என்பது தற்போது செயல்பாடுகள் குறைந்து காணப்படுவதால் அதனை முறையாக செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உரிய பதிவு, புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்கிட அரசை கேட்டுக்கொள்வது, மேலும் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமான தொழில் முக்கிய பங்காற்றி வருவதால் இந்த துறைக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்திட மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: