மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் பயன்படுத்த படாமல் வீணாகிப் போன உரக்கிடங்கு: கிராம மக்கள் வேதனை

செய்யூர்,  ஜன.29: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் மண்புழு உரம் தயாரிப்புக்காக அமைக்கப்பட்ட உரக்கிடங்கு, பயன்படாமல் வீணாகிப்போனது. இதனால், அப்பகுதி மக்கள் இடையே வேதனையும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் தீர்ப்பது மட்டுமின்றி, மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மண்புழு உரம் உற்பத்திக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தல சுமார் ₹1 ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகள் சேகரிக்கவும், அதனை தரம்பிரித்து மண்புழு உரம் உற்பத்தி செய்வதற்காகவும் உரக்கிடங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பல ஊராட்சிகளில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தாமல் விட்டதால், அங்குள்ள உரக்கிடங்குகள் பயன்படுத்தாமல் வீணாகி கிடக்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் மண்புழு உரம் உற்பத்திக்காக சுமார் ₹1 லட்சம் செலவில் உரக்கிடங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் கிராமப் பகுதிகளில்  குப்பைகளை சேகரிப்பதோடு நிறுத்திக் கொண்டது. மண்புழு உரம் உற்பத்திக்கான பணியை மேற்கொள்ளவில்லை.

இதனால், உரம் உற்பத்திக்காக கட்டப்பட்ட உரக்கிடங்கு கொட்டகை சரிந்து விழுந்து பயன்படுத்தப்படாமல் வீணாகி கிடக்கிறது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திடம் முறையான அறிவுரைகளையும், அணுகுமுறையும் இல்லாததும், உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தத் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தியதால், அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து ஊராட்சிகளிலும் உரக்கிடங்கு கணக்கு காண்பிக்கவே கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், அரியனூர் ஊராட்சி மட்டுமின்றி, அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொண்டு மண்புழு உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: