சேலம் அருகே எருதாட்டத்தில் மாடு முட்டி வாலிபர் சாவு

ஓமலூர், ஜன.29: சேலம் அருகே கருக்கல்வாடியில் நடைபெற்ற எருதாட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்ற இடத்தில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலம் காவல்நிலையத்திற்குட்பட்ட கருக்கல்வாடி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று அங்குள்ள மாரியம்மன் கோயில் திடலில் எருதாட்டம் நடைபெற்றது. இதில், தாரமங்கலம், கருக்கல்வாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து 80க்கும் மேற்பட்ட காளைகளை இளைஞர்கள் கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து பங்கேற்கச் செய்தனர். அதே வேளையில், பார்வையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சவுக்கு கம்பு கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனமும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், இளைஞர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் களத்தில் இறங்கி மாடு  பிடி விளையாட்டில் ஈடுபட்டனர். இதனால், எருதாட்டத்தில் களேபரம் ஏற்பட்டது.  உடனே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாரமங்கலம் போலீசார் கூட்டத்தை  கட்டுப்படுத்த முயன்றனர். அதேவேளையில், மாடுகளும் எதிரும்-புதிருமாக  மிரண்டு ஓட்டம் பிடித்தன. அப்போது, காளை ஒன்று கூட்டத்தில் புகுந்தது.  அந்த காளை திடீரென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை முட்டி தூக்கி  வீசியது. இதில், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில்,  கேஆர்தோப்பூர் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் தேவராஜ்(24)  என்பவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால், வீட்டிற்கு  சென்றதும் திடீரென மயக்கம்போட்டு விழுந்துள்ளார்.

இதனால், திடுக்கிட்ட பெற்றோர் அவரை ஆசுவாசப்படுத்தியுள்ளனர். அப்போது, கழுத்து மற்றும் தலை பகுதியில் அதிகமாக வலி உள்ளதாக கூறி துடித்துள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை தேவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  எருதாட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் மாடு முட்டியதில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: