நெடுவாசலில் விஷ வண்டுகள் கடித்த பள்ளி மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை

புதுக்கோட்டை , ஜன.28: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் அரசுப் பள்ளி அருகே நிற்கும் மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் கடித்து பள்ளி மாணவ, மாணவிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டுகளை தண்ணீர் அடித்து விரட்டினார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ள பல மாதங்களாக விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. அதனால் அந்தப் பகுதியில் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து சென்றுள்ளனர்.இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமேணி தனது மகன் வினோத்குமார் ( 5) யை பள்ளியில் விட தனது மோட்டார் சைக்கிளில் வந்தபோது திடீரென பறந்து வந்த விஷ வண்டுகள் இருவரையும் கடித்துள்ளது.

அதேபோல அந்த வழியாக நெடுவாசல் கிழக்கு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவிகள் கனிமொழி, பவதாரணி ஆகியோரையும் கடித்துள்ளது. விஷ வண்டுகள் கடித்து காயமடைந்து வலியால் துடித்தவர்களை நெடுவாசல் மேற்கு ஊராட்சி மன்றத் தலைவர் துரையரசன், விஏஓ மூகாம்பிகை, பள்ளி தலைமை ஆசிரியை லதா உள்பட அப்பகுதியினர் மீட்டு நெடுவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உடனே ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் சென்ற பலரையும் விஷ வண்டுகள் கடித்துள்ளது. இது குறித்து கொடுத்த தகவலின் அடிப்படையில கீரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷ வண்டுகளை களைத்ததுடன், வண்டுகள் கட்டியிருந்த கூடுகளையும் தண்ணீரை அடித்து அழித்தனர்.

Related Stories: