அறந்தாங்கி பகுதியில் கனமழை 30 ஏக்கர் சாகுபடி செய்த செங்கரும்பு அடியோடு சாய்ந்தது

அறந்தாங்கி, டிச.5: அறந்தாங்கி அருகே பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்டிருந்த 30 ஏக்கரில் செங்கரும்புகள் அடியோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் கீழ்பாதி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் பயன்படுத்தும் செங்கரும்பு சாகுபடி செய்து இருந்தனர். 12 மாத பயிரான செங்கரும்பை கடந்த ஜனவரி மாதம் நடவு செய்த விவசாயிகள் வரும் ஜனவரி மாதம் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தனர். செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு வயலிலும், மையத்தில் இருந்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வயலின் மையப்பகுதியில் 30 ஏக்கரில் நன்கு வளர்ந்திருந்த செங்கரும்புகள் அடியோடி சாய்ந்து போய்விட்டன. சாய்ந்த கரும்பை தற்போது விற்பனை செய்ய வழியில்லாததால், அவை வயலிலேயே காய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், உடனடியாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் துயர்துடைக்க உடனடியாக தொடர்மழையால் பாதிக்கப்பட்ட செங்கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, பொங்கல் பரிசு தொகுப்பிற்காக செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரசர்குளம் கீழ்பாதியை சேர்ந்த கரும்பு விவசாயி நந்தகுமார் கூறியது: பொங்கல் பண்டிகைக்காக அரசர்குளம் கீழ்பாதியில் ஆண்டுதோறும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தோம். ஒரு ஏக்கருக்கு ரூ. 2லட்சம் வரை சாகுபடிக்கு செலவு ஆகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கூட்டுறவு துறை சார்பில் எங்களிடம் ஒரு கட்டு கரும்பை ரூ.180 என்ற விலையில் வாங்கி சென்றனர்.இந்த ஆண்டு இதுவரை எங்களது கரும்பை வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் தொடர்பு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் சுமார் 40 சதவீத கரும்புகள் சாய்ந்துவிட்டன. இந்த கரும்புகளை தற்போது விற்பனை செய்ய வாய்ப்பு இல்லாததால், அவற்றை எடுத்து வீசும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தற்போதே எங்களது கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்தால், எங்களுக்கு ஏற்படும் இழப்பு குறையும். மேலும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: