மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சம் கடலாடியில் 117 மி.மீ

சாயல்குடி, அக். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. குடிமராமத்து பணிகள் நடந்த கண்மாய்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது நேற்று முன்தினத்தோடு முடிவுற்றது. மாவட்டத்தின் பிரதான மழையான வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் ராமநாதபுரம் நகராட்சி உள்ளிட்ட ஊரக பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை குளம்போல் தேங்கியது. தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமுள்ள ஜவுளி கடை தெருக்களில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மருத்துவமணை சாலையிலிருந்து சர்ச் பேருந்து நிறுத்தம் செல்லும் சாலையில் பணிகள் நடந்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்களுடன் சென்றனர். இதுபோன்று கிராமங்களில் உள்ள பண்ணைக்குட்டைகள் நிறைந்து கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சென்றதால் விவசாயிகள் வருத்தமடைந்தனர். ஆனால் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்த கண்மாய், ஊரணிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது நடப்பாண்டு விவசாயத்திற்கு கைகொடுக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலாடி உள்ளிட்ட ஊரக பகுதிகளில் இளைஞர்கள் தன்னார்வத்துடன் காட்டுபகுதியில் ஒடி வந்த தண்ணீரை ஊரணிகளில் பெருக்கினர். நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு(மி.மீ) கடலாடி 117, பரமக்குடி 104, தொண்டி 84, திருவாடனை 82 என மொத்த அளவில் 670.90 மி.மீ பதிவாகியுள்ளது.

Related Stories: