விவசாயிகள் பயன்பெற காவிரி,வைகை, குண்டாறு திட்டம் நிறைவேற்ற வேண்டும் வைகை பாசன சங்கம் வலியுறுத்தல்

பரமக்குடி, அக்.18:   பரமக்குடி தாலுகா சத்திரக்குடியில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ,தமிழக அரசை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சுப்பிரமணியன், சங்க சட்ட ஆலோசகர் பூமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  தாலுகா செயலாளர் காஜாமுகைதீன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் செல்வக்குமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர். வைகை பாசன சங்கத்தின் தென்மண்டல செயலாளர் மதுரைவீரன் கலந்து கொண்டு குடிநீருக்காக வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கவேண்டும். 2017-18ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டு தொகையை வழங்கவேண்டும். செவ்வூர் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வைகை ஆற்றின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்களில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். கடலில் கலக்கும் காவிரியின் உபரிநீரை மாயனூர் அணையில் இருந்து தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வைகையில் காவிரி,வைகை,குண்டாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இறுதியில் நாகூர்கான் நன்றி கூறினார்.

Related Stories: