ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு நோய் அச்சத்தில் மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.17:  திருப்பாலைக்குடி கிராமத்தில் தெருக்களில் சேகரித்து கொண்டு வரும் குப்பைகளை புதுக்குளம் ஊரணியில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதனை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி ஊராட்சி மற்ற கிராம ஊராட்சிகளை விட மிகப் பெரிய ஊராட்சியாகும். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அரசு ஆரம்ப நிலையத்திற்கு பின்புறமாக உள்ள புதுக்குளம் என்ற ஊரணியில் தான் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஊராட்சியில் உள்ள அனைத்து குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுவதால், இப்பகுதி சுகாதாரமற்ற பகுதியாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். ஒரு பக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், மற்ற பக்கங்களில் அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி, ரேசன் கடை, நூலகம், விவசாய சங்க கட்டிடம், மீன் மார்க்கெட் மற்றும் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்றவை அமைந்துள்ளது.

இங்கு கொட்டப்படும் குப்பைகளில் உருவாகும் கொசு, ஈக்கள் போன்றவைகள் மருத்துவமனை மற்றும் மார்க்கெட் பகுதி, பள்ளி கூடம் போன்ற பகுதிகளில் பறந்து சிறியவர்கள் முதல் மாணவர்கள் வயதானவர்கள் என அனைவரையும் கடிக்கிறது. இதனால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும், தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டு விடுமோ என்ற ஒரு விதமான அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் குப்பைகளில் உள்ள பாலிதீன் போன்றவற்றை ஆடு, மாடுகளும் தின்று விழுங்குவதால், அவை செரிமானம் ஆகாமல் இறக்க நேரிடுகின்றது. அடுத்து மழை காலம் என்பதால் அந்த குப்பைகளில் மழைநீர் பட்டவுடன் துர்நாற்றம் அடிக்கின்றது. இதனை ஊராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோல் குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: