திருவள்ளூர் நகரில் சிக்னல் கம்பங்களில் விளம்பர பலகைகள் காற்றில் ஆடுவதால் கீழே விழும் அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

திருவள்ளூர், செப்.  17: திருவள்ளூர் நகரில் முக்கிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல் கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள  விளம்பர பலகைகள் காற்றில் ஆடுவதால்,  வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உயிர்பலி ஏற்படுமுன் இந்த விளம்பர போர்டுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் விளம்பர டிஜிட்டல் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வந்தது. இந்த விளம்பரப் பலகைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே, 2003ல் சட்ட விதிகளை வகுத்தது தமிழக அரசு. அதன்பின்னும்  டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள் வைக்கப்பட்டதால்,  2007ல் நீதிமன்றத்தை நாடினர் சமூக ஆர்வலர்கள்.

விதிகளை மதிக்காமல் தான், விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றமே, விளம்பரப் பலகைகள் அனைத்தையும் அகற்ற அதிரடியாக உத்தரவிட்டது. உயர் நீதிமன்றமும் இதே உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், ‘’கண் துடைப்பாக’’’’ சிலவற்றை மட்டும் அகற்றி, உயர் நீதிமன்றத்துக்கு கணக்கு காட்டினர் அதிகாரிகள்.

இதனால், திருவள்ளூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் விதிமீறல் விளம்பரப் பலகைகள் விஸ்வரூபம் எடுத்தன. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் விதிகளை மீறி, அனுமதியின்றி பேனர்கள் வைப்பது தொடர்ந்தது. இந்நிலையில், பேனர் சரிந்து இரு உயிர்கள் பலியானது.

இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் பேனர் வைக்கக்கூடாது என  தொண்டர்களுக்கு  உத்தரவிட்டனர். மேலும், பேனர்களை வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் நகரில் மணவாளநகர் சந்திப்பு, ஆயில்மில், அரசு மருத்துவமனை, ஆவடி நெடுஞ்சாலை சந்திப்பு, உழவர் சந்தை, காமராஜர் சிலை, எம்ஜிஆர் சிலை, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், டோல்கேட், தேரடி, செங்குன்றம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சிக்னல் கம்பங்களில் அதிக எடை கொண்ட பெரிய அளவிலான விளம்பர  பலகைகள் இரவில் ஒளிரும் வகையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த விளம்பர பலகைகள் அனைத்தும் காற்றில் ஆடும் வகையில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது.

எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தால், சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உயிர்பலி ஏற்படுமுன் சிக்னல் கம்பங்களில் ஆடும் விளம்பர பலகைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: