தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

திருப்போரூர், செப்.17:  குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை என தமிழக அரசு மீது பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று திருப்போரூரில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக ஓஎம்ஆர் சாலையில் போடப்படும் புறவழிச்சாலை பணிகளை பார்வையிட்ட அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் நடப்பதாகவும், நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அரசு அறிவித்தாலும் முறையாக பணிகள் நடக்கவில்லை. திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம், இள்ளலூர், காயார், வெண்பேடு, வெங்களேரி, செம்பாக்கம் கிராமங்களில் உள்ள ஏரிகளை நான் பார்வையிட்டேன். இவற்றில் குடிமராமத்து என்ற பெயரில் எந்த பணிகளும் நடக்கவில்லை. பொழிகின்றன மழைநீரை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு விளை நிலங்கள் தரிசாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், ஒரு குழுவை அமைத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஜக்கி வாசுதேவின் பயணம் முழுமையும் அரசியல்வாதிகளை தோல்வி அடைய செய்யும் வகையில் உள்நோக்கத்துடன் அமைந்துள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளை சந்திப்பதாக அறிவித்துவிட்டு, அவர்களின் கருத்துகளை கேட்காமல் சென்று விட்டார்.

அவருக்கு உண்மையான அக்கறை இல்லை. தமிழக அரசு அவருக்கு துணை நிற்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர் ஒரு கார்ப்பரேட் ஆதரவாளராகவே காட்சி அளிக்கிறார். அவருக்கு அளிக்கும் ஆதரவு கார்ப்பரேட்டுக்கு அளிக்கும் ஆதரவாகவே பார்க்கப்படும். இதைவிட நீராதாரங்களை பாதுகாக்க ஆங்காங்கே களம் இறங்கியுள்ள மக்களுக்கு அரசு துணை நிற்க வேண்டும்.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையில், திருப்போரூர் பகுதி புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது. இவர்கள் சாலை அமைக்க நிலம் கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தேவையான நியாயமான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த சாலைப்பணியை தடுத்து போராட வேண்டிய நிலை ஏற்படும் என அரசை எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: