விதைநேர்த்தி செய்து விதைப்பதால் வாளிப்பான, செழிப்பான நாற்றுகள் உருவாகிறது விவசாயிகளுக்கு ஆலோசனை

திருக்காட்டுப்பள்ளி, ஆக 20: தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூதலூர், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி மற்றும் அகரப்பேட்டை ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் உயர் மகசூல் கொடுக்ககூடிய சிஆர்1009, சப்1இ கோ(ஆர்)50, என்எல்ஆர் 34449 ஆகிய சான்று பெற்ற நெல் ரகங்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.நாற்று விடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்வது அவசியம். பயிரை தாக்கக்கூடிய நோய் காரணிகள் விதை, தண்ணீர், பயன்படுத்துகிற பண்ணை கருவிகள் மூலமாக பரவுகிறது. விதை மூலம் பரவக்கூடிய நோய்களாகிய வேரழுகல், இலைகருகல், குலை நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் வாடல் நோய் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தி வாளிப்பான நாற்றுகள் பெற விதை நேர்த்தி செய்ய வேண்டும். சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் என்ற உயிர் எதிரி பாக்டீரியா ஒரு கிலோ விதைக்கு 10 கிராம், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் தேவையான அளவில் நீரில் நன்கு கலக்கி கொண்டு அதில் தரமான விதைகளை இட்டு கலக்கி 20 முதல் 24 மணி நேரம் ஊர வைத்து பின்பு முளைக்கட்டி விதைக்க வேண்டும்.

இவ்வாறு விதைநேர்த்தி செய்து விதைப்பதால் வாளிப்பான, செழிப்பான நாற்றுகள் உருவாகிறது. ரசாயன நோய் கொல்லிகள் பயன்படுத்த தேவையில்லை. தரமான விதையும், செழிப்பான நாற்றுகளும் கூடுதல் மகசூல் பெறுவதற்கு அடிப்படை தேவை. சென்ட் நாற்றாங்கால் அல்லது தட்டு நாற்றாங்கால் அல்லது பாய் நாற்றாங்கால் அமைத்து நாற்று தயார் செய்வதால் தண்ணீர் பயன்பாடு மற்றும் நாற்று விடுவதற்கான செலவும் குறைகிறது.விவசாயிகள் அனைவரும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பிலுள்ள சான்று பெற்ற நெல் விதைகளை பெற்று சாகுபடி செய்யலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: